தமிழ் | Tamil

குடும்ப வன்முறைக்கு ஆளாகிறவர்களுக்கும், குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கான ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கும் உதவியையும், ஆதரவையும் The Orange Door வழங்குகிறது. Information about The Orange Door in Tamil.

தமிழ் மொழியிலான தகவல்

குடும்ப வன்முறைக்கு ஆளாகிறவர்களுக்கும், குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கான ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கும் உதவியையும், ஆதரவையும் The Orange Door வழங்குகிறது.

சில நேரங்களில், வீடு அல்லது உங்கள் உறவு தொடர்பான விடயங்கள் சரியாக இருப்பதில்லை. அப்போது உங்களுக்குக் கொஞ்சம் உதவியும் ஆதரவும் தேவைப்படும். நீங்கள் சொல்வதைக் கேட்கவும், உங்களுக்குத் தேவையான ஆதரவை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுத்தரவும் The Orange Door இங்குள்ளது.

நீங்கள் உடனடி ஆபத்தில் இருந்தால், பூச்சியம்-பூச்சியம்-பூச்சியம் (000) என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

பின்வரும் சூழ்நிலைகளில் The Orange Door உதவக்கூடும்:

  • பிள்ளை வளர்ப்புத் தொடர்பாக உங்களுக்கு உதவி தேவை, அல்லது ஒரு குழந்தை அல்லது இளையவரின் நல்வாழ்வு அல்லது வளர்ச்சி குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.
  • உங்கள் வாழ்க்கைத் துணை, முன்னாள் வாழ்க்கைத் துணை, குடும்ப உறுப்பினர் அல்லது பராமரிப்பாளர் போன்ற உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களுக்குப் பய உணர்வையோ அல்லது பாதுகாப்பற்ற உணர்வையோ ஏற்படுத்துகிறார்.
  • பாதுகாப்பாகவோ அல்லது பராமரிக்கப்படுவதாகவோ உணராத ஒரு குழந்தையாக அல்லது இளையவராக நீங்கள் இருக்கிறீர்கள்.
  • நீங்கள் தீங்கு விளைவிக்கும் அல்லது மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் நடத்தையைப் பயன்படுத்தும் அபாயத்தில் உள்ளீர்கள், அல்லது வீட்டிலோ ஓர் உறவிலோ இவ்வாறான நடத்தைகளைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது.
  • உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் பாதுகாப்பைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.
  • நீங்கள் எங்கு செல்கிறீர்கள், யாரைப் பார்க்கச் செல்கிறீர்கள், அல்லது பணத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பதை யாராவது ஒருவர் கண்காணிப்பது போன்ற, மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் நடத்தை உள்ளிட்ட குடும்ப வன்முறையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்.

The Orange Door பின்வரும் வகையில் உங்களுக்கு உதவிபுரியக்கூடும்:

  • நீங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக்கேட்பது மற்றும் உங்கள் கவலைகள் எவை என்பது பற்றிக் கேட்பது.
  • உங்களுக்குத் தேவையான உதவி மற்றும் ஆதரவை அடையாளம் காண உங்களுடன் இணைந்து பணியாற்றுவது.
  • குழந்தைகள் மற்றும் இளையோரின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பது.
  • உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க, ஒரு பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க உங்களுக்கு உதவுவது.
  • ஆலோசனை, தங்குமிடம், குடும்ப வன்முறை தொடர்பான ஆதரவு, மனநலம், அத்துடன் போதைப்பொருள் மற்றும் மதுபான விலக்குச் சேவைகள், பெற்றோர் ஆதரவுக் குழுக்கள், குழந்தைகளுக்கான சேவைகள், நிதியுதவி, அல்லது சட்ட உதவி போன்ற, உதவக்கூடிய சேவைகளுடன் உங்களை இணைப்பது.
  • அடிப்படை வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பிற செலவுகளுக்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு ஆதரவளிப்பது.
  • நீங்கள், வீட்டில் அல்லது ஓர் உறவில் தீங்கு விளைவிக்கும் அல்லது மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் நடத்தையைப் பயன்படுத்தினால், அதை மாற்றுவதற்கு உதவிபுரிய உங்களுடன் இணைந்து பணியாற்றுவது.

The Orange Door-ஐ நான் எவ்வாறு அணுக முடியும்?

The Orange Door திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் (பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்).

உங்கள் உள்ளூர் சேவையைக் கண்டறிய, இருப்பிடம் அல்லது அஞ்சல் குறியீட்டைப் பயன்படுத்தித் தேடவும்.

நீங்கள் தகவல் தொடர்பு உதவிச் சாதனங்களைப் பயன்படுத்தினால், அல்லது 'ஒஸ்லான்' (Auslan) உள்ளிட்ட மொழிபெயர்ந்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், The Orange Door-ஆல் உங்களுடன் இணைந்து பணிபுரிய இயலும்.

எனக்கு ஒரு மொழிபெயர்ந்துரைப்பாளர் தேவை

உங்களுக்கு ஒரு மொழிபெயர்ந்துரைப்பாளர் தேவைப்பட்டால், அதுபற்றி இந்தச் சேவைக்குத் தெரியப்படுத்தவும். பின்வருபவற்றை சேவைக்குத் தெரியப்படுத்தவும்:

  • உங்கள் தொலைபேசி எண்
  • உங்கள் மொழி
  • எப்போது அழைப்பது பாதுகாப்பானது.

உங்களை ஒரு மொழிபெயர்ந்துரைப்பாளர் திரும்ப அழைப்பார்.

The Orange Door என்பது எனக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சேவையா?

எவ்விதமான வயது, பாலினம், பாலியல் தன்மை, கலாச்சாரம், மற்றும் திறன் ஆகியவற்றைக் கொண்ட நபர்களையும் The Orange Door வரவேற்கிறது. அனைத்துக் கலாச்சார மற்றும் மத விருப்பங்களும் மதிக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு ஆண் பணியாளருடனா அல்லது ஒரு பெண் பணியாளருடனா இணைந்து செயற்பட விரும்புகிறீர்கள் என்பதை பணியாளருக்குத் தெரியப்படுத்தவும். தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்கலாச்சார சேவைகள், LGBTI சேவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் ஆகியவற்றுடன் The Orange Door இணைந்து செயற்படுகிறது. விருப்பத்தெரிவுகளைப் பற்றிய தகவலை உங்களுக்கு பணியாளர்கள் வழங்குவார்கள், அத்துடன் உங்களுக்குத் தேவையான சேவைகளுடன் உங்களை இணைப்பார்கள்.

நீங்கள் ஒரு புலம்பெயர்ந்தவராகவோ அல்லது அகதியாகவோ அல்லது நிரந்தர வதிவிட உரிமை இல்லாதவராகவோ இருந்தாலும்கூட, எங்களால் உங்களுக்கு உதவ முடியும். உங்கள் குடிபெயர்வு நிலை காரணமாக ஆதரவைப் பெறப் பயப்பட வேண்டாம். இது ஒரு இலவச சேவையாகும். உங்கள் நிலைமை குறித்து நீங்கள் தொலைபேசியிலா அல்லது நேரிலா கலந்துரையாட விரும்புகிறீர்கள் என்பதை The Orange Door பணியாளர்களுக்குத் தெரியப்படுத்தவும்.

The Orange Door திறந்திருக்காதபோது நான் எங்கு செல்ல வேண்டும்?

இந்த நேரத்திற்கு வெளியே, பின்வரும் சேவைகளைத் தொடர்புகொள்ளவும்:

  • 1300 766 491-இல் ஆண்களின் பரிந்துரை சேவை (Men’s Referral Service) (திங்கள்-வெள்ளி காலை 8 மணி-இரவு 9 மணி, அத்துடன் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 9 மணி-இரவு 6 மணி) (ஆண்களுக்கான குடும்ப வன்முறை பற்றிய தொலைபேசியூடான ஆலோசனை, தகவல் மற்றும் பரிந்துரைச் சேவை)
  • Safe Steps என்பது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஓர் ஆதரவுச் சேவையாகும் 1800 015 188 (வாரத்தில் 7 நாட்களும், ஒரு நாளில் 24 மணிநேரமும்). நீங்கள் Safe Steps-க்கு மின்னஞ்சலும் அனுப்பலாம் அல்லது அவர்களின் நேரடி இணையவழி அரட்டை (web chat) ஆதரவுச் சேவையையும் பயன்படுத்தலாம்.
  • Victims of Crime உதவி இணைப்பு (குற்றத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அத்துடன் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட வயது வந்த ஆண்களுக்குமானது) 1800 819 817 அல்லது 0427 767 891-க்கு குறுஞ்செய்தி அனுப்பவும் (ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை)
  • The Sexual Assault Crisis Line என்பது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கானது 1800 806 292 (வாரத்தில் 7 நாட்களும், ஒரு நாளில் 24 மணிநேரமும்)

நீங்களோ அல்லது வேறு யாராவதோ உடனடி ஆபத்தில் இருந்தால், அவசர உதவிக்கு பூச்சியம்-பூச்சியம்-பூச்சியம் (000)-ஐ அழைக்கவும்.

பின்னூட்டம் மற்றும் தனியுரிமை

Orangedoor.vic.gov.au/feedback -இல் உள்ள இணையவழி பின்னூட்டப் படிவத்தை பயன்படுத்தி அல்லது 1800 312 820 என்ற எண்ணை அழைத்து, உங்கள் பணியாளர், மேற்பார்வையாளர் அல்லது மேலாளரிடம் பேசவேண்டும் எனக் கேட்டு The Orange Door-ஐப் பற்றிய உங்களது பின்னூட்டத்தை நீங்கள் வழங்கலாம்.

உங்கள் தனியுரிமையை நாங்கள் அக்கறையுடன் எடுத்துக்கொள்கிறோம். உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துவோம் என்பதைப் பற்றி அறிய, எங்கள் தனியுரிமைக் கொள்கையைத் தயவுசெய்து பார்க்கவும்.

Updated